தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் விமர்சனம் நடிகர் : வடிவேலு
நடிகை : மீனாட்சி தீக்ஷித்
இயக்குனர் : யுவராஜ் தயாளன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : ராம்நாத் ஷெட்டி

மன்னர் வடிவேலு, விகட நகரத்தை தனது மந்திரிசபையில் உள்ள ஒன்பது அமைச்சர்களிடம் விட்டுவிட்டு அந்தரப்புரமே கதியென்று சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்நிலையில் மன்னனை ஏமாற்றி, சீன வியாபாரிகளை விகட நகரத்திற்கு வியாபாரம் செய்ய அழைத்து வருவதற்கு 9 மந்திரிகளுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார் ராஜதந்திரியான ராதாரவி. அதில் ஒருவர் மன்னனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்க அவரை கொலை செய்து இயற்கையான மரணம் போல் காட்டுகிறார்கள்.

அரசவையில் காலியாகும் அந்த மந்திரிப் பதவியை தனது புத்திக்கூர்மையால் கைப்பற்றுகிறார் தெனாலிராமனான மற்றொரு வடிவேலு. உண்மையில் தெனாலிராமன் அரசவையில் இடம்பிடித்தது ஆட்சிபுரிய அல்ல. மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி. ஆனால், அரண்மனைக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது, இத்தனைக்கும் காரணம் மந்திரிகள் தான் என்று. ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா? மன்னர் திருந்தினாரா? இளவரசியை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மன்னர், தெனாலிராமன் என இருவேடங்களில் நடித்தாலும் வித்தியாசம் காட்டி கலக்குகிறார். டைமிங் வசனம், பாடி லாங்குவேஜ் என தனது ஸ்டைலை அப்படியே வைத்து இருக்கிறார். அதிலும் தெனாலிராமனாக வரும் வடிவேலு செய்யும் பானைக்குள் வந்த யானை உள்ளிட்ட சேட்டைகள் செம காமெடி!

கதாநாயகி மீனாட்சி தீக்ஷித் ஒரே ஒரு பாடலில் வடிவேலுவுடன் ஆடிப்பாடியிருக்கிறார். மந்திரி மேல் காதல் கொள்ளும் இளவரசி வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இது குழந்தைகள் படம் என்ற தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் படம் முழுக்க கவர்ச்சியுடனும் வலம் வருகிறார்.

குறுநில மன்னராக வரும் ராதாரவியின் டேம் மிகப்பொருத்தம். அதிலும ஒன்பது மந்திரிகளில் ஒருவராக வரும் மனோபாலா அட்டகாசம். அமைதியாக டயலாக் பேசி அட்டகாசமான நடிப்பை தந்திருககிறார். மற்றும் திருட்டு கும்பல் தலைவன் பெசண்ட் ரவி, மனிதகறி மன்சூர் அலிகான், கிங்காங், தேவதர்ஷினி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தெனாலிராமன்’ படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை என்று எல்லா டீமும் கடுமையாக உழைத்திருப்பதை படத்தில் காண முடிகிறது. இடைவேளை வரை படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம். திடீர் திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக திரைக்கதை நகர்கிறது. பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.

தெனாலிராமன் கதையில் வரும் சின்ன சின்ன சிறுகதைகளை மிகச்சரியான இடங்களில் ஒன்று சேர்த்து திரைக்கதை அமைத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம். சீரியஸாக மட்டும் கதையை கொண்டு செல்லாமல் இடையிடையே பிளாஷ்பேக் நகைச்சுவையை காட்டி போரடிக்காமல் கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர் நடிக்க வந்தாலும, இன்னும் தன்னால் முன்புபோல நகைச்சுவையில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் வடிவேலு.

மொத்தத்தில் ‘தெனாலிராமன்’ நகைச்சுவை கொண்டாட்டம்

Tags: 

Leave a Reply