ராகுல்காந்தி முதல் ஆளுநர் வரை யாராலும் ஜெயலலிதாவை சந்திக்க முடியலையே?

ராகுல்காந்தி முதல் ஆளுநர்  வரை யாராலும் ஜெயலலிதாவை சந்திக்க முடியலையே? சென்னை: உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மருத்துவர்களை மட்டுமே சந்தித்து விசாரித்து விட்டு சென்றுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் முதல் ராகுல்காந்தி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை காண வந்தும் அவரை சந்திக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்திக்கு விளக்கினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

சுமார் 40 நிமிடங்கள் மருத்துவமனைக்குள் இருந்த ராகுல்காந்தி, மருத்துவமனைக்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அன்னை சோனியாகாந்தியின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கவே நான் சென்னை வந்தேன். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

சந்திக்காத ராகுல்காந்தி

ராகுல்காந்தி சில நிமிடங்கள் மட்டுமே பேசினாலும் அவருடைய பேச்சு வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலம் என்பதை பதிவு செய்யும் விதமாகவே இருந்தது மொத்தத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தியும் ஜெயலலிதாவை காணாமல் மருத்துவக்குழுவினரிடம் மட்டுமே விசாரித்து விட்டு சென்றுள்ளார். ராகுல்காந்தி மட்டுமல்ல அக்டோபர் 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோ வந்த ஆளுநரும், அவரை சந்திக்கவில்லை. ஜெ.,வை சந்திக்காத காரணம் என்ன?

ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம், முதல்வரை பார்க்க முடியுமா? என்று கேட்​டதற்கு, ‘நோய்த் தொற்று தீவிரமாக உள்ளது. அதனால், இப்போது பார்ப்பது, முதல்வருக்கும் நல்லதல்ல; உங்கள் ஆரோக்கியத்​துக்கும் நல்லதல்ல என்று சொல்லப்பட்டதாம். மேலும், அந்த வார்டுக்குள் போகவேண்டு​மானால், ஆளுநர் தன்னுடைய ஷூக்களை கழற்றிவிட்டு, முகத்திலும் தலையிலும் பாதுகாப்பு உறை அணியவேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறைகளை டாக்டர்கள் விளக்கி உள்ளனர். அப்படியானால், முதல்வரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார். இதன் பின்னரே அறிக்கை வெளியிட்டார். அப்பல்லோவில் ஆளுநர் இருந்தது மொத்தமே 10 நிமிடங்கள்தான்.

திருமா முதல் சீமான் வரை ஆளுனரைத் தொடர்ந்து வரிசையாக திருமாவளவன் இரண்டாவது தளம் வரைக்கும் எந்த கெடுபிடியும் இல்லாமல் சென்று வந்ததாக கூறினார். அவரும் முதல்வரை பார்க்கவில்லை. அதேபோல தா.பாண்டியன், சீமான், அமீர், அற்புதம்மாள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று சென்றனர். திருமாவளவன் தவிர பிற தலைவர்கள், பிரபலங்கள் யாருமே இரண்டாவது தளத்துக்குப் போகவில்லையாம். அமைச்சர்கள் பேச்சு

நேற்றைய தினம் எல்லோருமே முதல் தளத்துடன் நிறுத்தப்பட்டர்கள். முதலில் சீமான் வந்தபோது அவரோடு நீண்டநேரம் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பேசிக்கொண்டிருந்தாராம். அவர் சொல்வதை கேட்ட சீமான், அம்மா நல்லபடியா வந்தால் அதுவே போதும்! என்று கூறிவிட்டு முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தார்கள். வதந்திகள் ஆயிரம் வரும். அதையெல்லாம் யாரும் நம்ப வேண்டாம்!' என்று ஊடகத்தினரிடம் சொல்லிவிட்டுப் போனார்.

எல்லாம் நம்பிக்கைதான்

எல்லோரையும் முதல்வரைப் பார்க்க அனுப்பணும்னுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் இன்பெக்‌ஷன் ஆகும் என்பதால்தான் மருத்துவர்கள் யாரும் உள்ளே போகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க...' என்று பக்குவமாகச் சொல்லி அனுப்புகின்றனர் அமைச்சர்கள். அதனால்தான், அமைச்சர்கள் பேசுவதுதான் நம்பிக்கையான தகவல் என்று வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகின்றனர். ராகுல்காந்தியும் மருத்துவர்கள் கூறியதாகவே வந்து செய்தியாளர்களிடம் பேசிவிட்டு சென்றார். ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிராத்தனையாக உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர் ஒரு பெண் தலைவர் என்பதால் அவரை சந்திக்க வரும் ஆண் தலைவர்கள் நேரில் சந்தித்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: 

Leave a Reply