விஜயகாந்த் பாய்ச்சல்: கருத்துகணிப்பு வெளியிடும் ஊடகங்கள் மீது

விஜயகாந்த் பாய்ச்சல்: கருத்துகணிப்பு வெளியிடும் ஊடகங்கள் மீது சென்னை :
கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களை தே.மு..திக தொண்டர்கள் இனி பார்க்க வேண்டாம் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கருத்து கணிப்பு வெளியிடுவதில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஊடகங்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், பெரும்பாலான ஊடகங்கள் தி.மு.க, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அதனால் கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களை தே.மு.தி.க.,வினர் பார்க்க வேண்டாம். இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். நாங்கள் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். திராவிடக் கட்சிகள் தே.மு.தி.க தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கின்றன. பல ஆண்டுகளாக இதைத்தான் செய்கின்றன.
தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம் இரு கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதிலும் அவர்கள் கூட்டணிதான் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் கருத்து கணிப்புகள் அல்ல‌ கருத்துத் திணிப்புகள் மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க விடம் பணபலம் உள்ளது. எங்களிட‌ம் மனபலம் உள்ளது. இன்னும் 7 நாள்கள் தான். மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்... மாநிலத்தில் மாற்றம் வரும்.
நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எந்நேரமும் உழைக்கக்கூடியவர்கள். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் உங்களுக்காக ஓடோடி வந்து உழைக்கக்கூடியவர்கள். தப்பு எங்கு நடந்தாலும் எங்கள் கண்ணுக்கு தெரியும். யாராக இருந்தாலும் அடிப்பேன். அடித்தவர்கள் யாராவது என் மீது புகார் செய்தார்களா? 32 மாவட்டங்களிலும் என் மீது வழக்கு போட்டு சுற்ற விட்டார்கள். எல்லா வழக்கையும் உடைத்து விட்டு வெளியே வந்துள்ளேன். விவசாயத்தை என் இரு கண்களாக நினைக்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Tags: 

Leave a Reply