4 ஓவர்.. 8 ரன்.. 4 விக்கெட்... அசத்திய அஸ்வின்.. கசங்கிய இலங்கை... டி20 தொடர் இந்தியாவுக்கு!

4 ஓவர்.. 8 ரன்.. 4 விக்கெட்... அசத்திய அஸ்வின்.. கசங்கிய இலங்கை... டி20 தொடர் இந்தியாவுக்கு! விசாகப்பட்டிணம்: இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினின் மாயாஜால சுழற்பந்து வீச்சில் சிக்கி இலங்கை தோல்வியை தழுவியது. இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப் பயணம் வந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. புனேயில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது.
ஆனால் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில், எழுச்சியுடன் ஆடிய இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை மண்ணை கவ்வ செய்தது.
முக்கிய போட்டி இந்நிலையில், தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி விசாகபட்டிணத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது.
வயதான பெர்னாண்டோ :
இலங்கை அணியில் காயமடைந்த கபுகேதரா மற்றும் குணதிலகா, கசுன் ரஜிதா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குணரத்னே, நிரோஷன் டிக்வெலா, தில்கரா பெர்னாண்டோ ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 36 வயதான பெர்னாண்டோ 4 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருந்தார்.
டாசில் இந்தியா வெற்றி:
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோணி முதலில் எதிரணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி டிக்வெலாவும், தில்ஷனும் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
டோணியின் யுக்தி :
தனது நம்பிக்கை நட்சத்திரமான, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை முதல் ஓவரை வீசச் செய்தார் டோணி. டோணியின் யுக்திக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் ஓவரின் 3வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயன்ற டிக்வெலா (1 ரன்), டோணியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதே ஓவரின் கடைசி பந்தில் தில்ஷனும் (1 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அசத்திய அஸ்வின் :
இதனால் அதிர்ந்து போன இலங்கை அணியினர் சுதாரிப்பதற்குள் அஸ்வின் தனது பிடியை மேலும் இறுக்கினார். அவரது அடுத்த ஓவரில் கேப்டன் சண்டிமாலும் (8 ரன்), இன்னொரு ஓவரில் அறிமுக வீரர் குணரத்னேவும் (4 ரன்) வீழ்ந்தனர். பேட்டிங் உருக்குலைந்ததால் இலங்கை அணியினரால் அதன் பிறகு நிமிர முடியவில்லை.
பலே பவுலிங் :
ஜடேஜா, பும்ரா, நெஹ்ரா, ரெய்னா உள்ளிட்ட மற்ற பவுலர்களும் கணிசமான பங்களிப்பை அளிக்க இலங்கை அணி 18 ஓவர்களில் வெறும் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்யப்பட்டது. தசுன் ஷனகா (19 ரன்), திசரா பெரேரா (12 ரன்) தவிர மற்ற அனைவரும் அந்த அணியில் ஒற்றை இலக்கில் விரட்டியடிக்கப்பட்டனர்.
சுருட்டியது இந்தியா :
டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணியின் குறைந்த ஸ்கோராக இது பதிவானது. இதற்கு முன்பு 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 87 ரன்கள் எடுத்ததே இலங்கையின் மோசமான ஸ்கோராக இருந்தது.
தெறி வெற்றி :
பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தெறி வெற்றி கண்டது. ஷிகர் தவான், சிக்சர், அதையடுத்த பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை மங்களகரமாக முடித்து வைத்தார்.
தவான் கலக்கல் :
தவான் 46 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது.
பெரிய விசில் :
அடிங்க ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அஸ்வின் பெற்றார். அஸ்வின் நேற்றைய போட்டியில் வீழ்த்திய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து, இத்தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply