பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள கதாநாயகன்–கதாநாயகி: விக்ரம்–சமந்தா.

டைரக்சன்: விஜய் மில்டன்.

கதையின் கரு: ஒரு கார் டிரைவரும், கடத்தப்படும் ஆதரவற்ற பெண்ணும்...

விக்ரம், கார் டிரைவர். முனீஸ்காந்தின் கார் ஓட்டும் பயிற்சி பள்ளியில் வேலை செய்கிறார். ‘பத்து எண்றதுக்குள்ள’ நினைத்த இலக்கை அடையும் அபாரமான துணிச்சல்காரர். இவருடைய ‘டிரைவிங்’ திறமையைப் பார்த்து பசுபதி தனது கடத்தல் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். அவர், விக்ரமிடம் புதுசாக ஒரு வேலை கொடுக்கிறார்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஒரு காரை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்கு கடத்தும்படி கூறுகிறார். அந்த காருக்குள், ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த சமந்தா மயங்கிய நிலையில் கிடக்கிறார். அது தெரியாமல் அந்த காரை லாவகமாக கடத்தி செல்கிறார், விக்ரம். பாதி வழியில், சமந்தாவுக்கு மயக்கம் தெளிய–இருவரும் ஜோடியாக பயணிக்கிறார்கள்.

அந்த காரை உரியவரிடம் ஒப்படைக்கும்போதுதான் சமந்தா கடத்தப்பட்ட விவரம் விக்ரமுக்கு தெரியவருகிறது. சமந்தா ஏன் கடத்தப்பட்டார், கடத்தல்காரர்களின் நோக்கம் என்ன? என்பது பதற்றமான மீதி கதை.

எந்தவித பயங்கர தோற்றமும் இல்லாத அழகான விக்ரம், படத்தின் முதல் சிறப்பு அம்சம். துணிச்சலான கார் டிரைவர் கதாபாத்திரத்தில், ‘ஹாலிவுட்’ நடிகர் போல் கச்சிதமாக பொருந்துகிறார். கட்டி முடிக்கப்படாத பாலத்தை விக்ரம் தனது காரில் அசுர வேகத்தில் பறந்தபடி கடப்பது போல் எதிர்பார்ப்புடன் அறிமுகமாகிறார். ‘பத்து எண்றதுக்குள்ள’ பொருளை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறார்.

சண்டை காட்சிகளிலும், கார் துரத்தல் காட்சிகளிலும் விக்ரமின் சாகசங்கள் ரசிக்க வைக்கின்றன. சமந்தாவுடனான முட்டல்–மோதல் காட்சிகளில், சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த வசீகர அழகியாகவும், வட மாநிலத்தை சேர்ந்த கொலைகாரியாகவும் இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்டியிருக்கிறார், சமந்தா. ‘‘தனியா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உன் கூடவே இருந்துடட்டுமா?’’ என்று விக்ரமிடம் கேட்கும் இடத்தில் ஆதரவையும், அனுதாபத்தையும் அள்ளுகிறார், சமந்தா.

பசுபதி, வில்லனாக எடுபடவில்லை. வட இந்திய முகங்களுடன் வரும் இரண்டு வில்லன்களும் (அபிமன்யூ, ராகுல்தேவ்) மிரட்டலாக தெரிகிறார்கள். இமானுக்கு என்ன ஆச்சு? பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கவில்லை. கார் துரத்தல் காட்சிகளில், ஒளிப்பதிவு யார்? என்று கேட்க தூண்டுகிறார், பாஸ்கரன் கே.எம்.

கொலை வெறியுடன் ஆரம்பித்து, இடைப்பட்ட காட்சிகளை மெதுவாக நகர்த்தி, இறுதி காட்சிகளில் ஒரு திருப்பத்துடன் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய் மில்டன். ஒரு கடத்தலுடன் கூடிய பயண கதையை இன்னும் திகிலாக–விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்.

Tags: 

Leave a Reply