மேகி நூடுல்ஸ் தடை நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

மேகி நூடுல்ஸ் தடை நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மும்பை,

மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை ஐகோர்ட்டு நீக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக மந்திரி கிரிஷ் பாபத் அறிவித்துள்ளார்.

மேகி நூடுல்சுக்கு தடை

நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக இரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னிலையில் , மேகி நூடுல்ஸ் விற்பனை மற்றும் தயாரிப்புக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அந்நிறுவனம் திரும்ப பெற்றது. அதேசமயம், இந்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மேகி நூடுல்ஸ் மீது விதிக்கப்பட்ட தடையை கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகள் திரும்ப பெற்றன. அரசு அங்கீகாரம் பெற்ற மூன்று ஆய்வகங்கள் அனுப்பிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை அம்மாநில அரசுகள் எடுத்தன.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஆனாலும், மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை ஐகோர்ட்டு நீக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக மராட்டிய உணவு மற்றும் சிவில் சப்ளைத்துறை மந்திரி கிரிஷ் பாபத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘நுகர்வோரின் ஆரோக்கியத்துக்கு எந்தவொரு பிரச்சினையும் வர கூடாது என்பதற்காக தான் மேகி நூடுல்ஸ் மீது தடை விதித்தோம். மேலும், அரசு ஆய்வகத்தில் இருந்து கிடைத்த மாதிரி அறிக்கையில் மேகி நூடுல்சில் அதிகப்படியான ரசாயன கலவை இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Tags: 

Leave a Reply