அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக மைதானத்தில் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (அக்.17) நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக மைதானத்தில் வரும் சனிக்கிழமை (அக்.17) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று 20 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலையளிப்போர் கோரும் திறன்களை அறிந்து பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலைபார்க்க விரும்புவோர் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிருவனத்தின் சேவையும் இங்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுயதொழில் குறித்து ஆலோசனையும் பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

source: dinamani

Tags: 

Leave a Reply