பழம்பெரும் நடிகை "ஆச்சி" மனோரமா காலமானார்

பழம்பெரும் நடிகை தமிழ் திரையுலகின் மூத்த நடிகை மனோரமா. "ஆச்சி" என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் கோபி சாந்தா.

தொடக்க காலத்தில், சில நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்து, படிப்படியாக முன்னேறியவர் மனோரமா. பின்னர் திரை உலகில் நுழைந்தார். கண்ணதாசனின் "மாலையிட்ட மங்கை" படத்தின் மூலம் அறிமுகமான அவர், நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.

நகைச்சுவை வேடம் மட்டுமின்றி, குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பல திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார். மனோரமா 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பத்மஸ்ரீ, கலைமாமணி, கலைவாணர் விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா.

சமீப காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

நடிகை மனோரமா சென்னை தியாகராய நகர், நீலகண்ட மேத்தா தெருவில் நீண்டகாலமாக வசித்து வந்தார். அவருக்கு பூபதி என்ற ஒரு மகன் உள்ளார்.

மனோரமா, அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய 5 முதலமைச்சர்களுடனும் நடித்துள்ள பெருமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மனோரமாவின் இருதிச் சடங்கு இன்று மாலை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது. மனோரமாவின் மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply