ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா

ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா கொல்கத்தா, ஜூன்.3-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா நடக்கிறது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் பல்டி அடித்ததுடன், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தோல்வி கண்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அத்துடன் வெற்றி பெற்ற இரவு பெங்களூர் ஓட்டலில் அணியினருக்கு உற்சாக விருந்தை நடிகர் ஷாருக்கான் அளித்தார். விருந்து அதிகாலை வரை நீடித்தது.

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானுக்கும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதிப்போட்டியில் சதம் அடித்த பெங்காலை சேர்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கும் (பஞ்சாப் அணி) சமூக வலைதளத்தின் மூலம் மம்தா பானர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த முறை போல் இந்த முறையும் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியினருக்கு பாராட்டு விழா நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கமும், மேற்கு வங்காள அரசும் முடிவு செய்துள்ளது. பாராட்டு விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

கடந்த முறை வீரர்களுக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது குறித்து மேற்கு வங்காள அரசு மீது சர்ச்சை கிளப்பியது. இதனால் இந்த முறை எந்த மாதிரி விழா நடத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

வெற்றி குறித்து கொல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் அளித்த பேட்டியில், ‘மனிஷ் பாண்டே ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று நம்பினேன். அதேபோல் அவர் அபாரமாக ஆடினார். சிறப்புக்குரிய இந்த வெற்றியை எனது குழந்தை அப்ராம்க்கும், அணி நிர்வாகத்தினருக்கும் அர்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply