இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்!

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இசைஞானி இளையராஜாவின் பெயர் இன்று இணையத்திலும் பொது வெளியிலும் அதிக அளவில் உச்சரிக்கப்படுகிறது, எழுதப் படுகிறது.

ராஜாவின் ரசிகர்களுக்கு இதைவிட இன்பமான விஷயம் வேறென்ன இருக்க முடியும். அவரது இசையைக் கேட்கும்போது ஏற்படும் பரவசம் மாதிரி, அவரது புகழ் பாடப்படுவதைக் கேட்பதிலும் ஒரு பரவசம்!

40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆளும் அந்த மகா கலைஞனை இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள்? நல்ல இசையைக் கேட்கத் தவறிய குற்றவுணர்ச்சி மற்றும் அந்த உன்னத இசைக் கலைஞனின் இருப்பின் முக்கியத்துவம் உணர்ந்ததால் வந்த அதீத அன்பு இது என்று கொள்ளலாம்!

இளையராஜா என்பது வெறும் பெயரோ... ஒரு வழக்கமான இசைக் கலைஞனோ அல்ல... ஒரு நூற்றாண்டின் அவதாரம், மரியாதை, கவுரவம் அந்தப் பெயர்.. பெயருக்குரியவர்.

பாமரனுக்கும் இசையின் உன்னதத்தை உணர்த்துவதற்காக, அதன் இசையின் பழைய மரபுகளைப் பெயர்த்தெறிந்த புரட்சிக்காரர் அவர்.

இன்று பலரும் சுகமாகப் பயணிக்கும் தமிழ்த் திரையிசையின் ராஜபாட்டையை பல பாடுகளுக்கிடையில் போட்டுத் தந்தவர். இன்றும் ஜீவ இசை கிளம்பும் ஒரே இடம் அவரது விரல்களின் தழுவலில் சுகித்துக் கிடக்கும் அந்த ஆர்மோனியமே!

இன்று இசையின் பிறந்த நாள் என்றால், சிலர்.. ஆம், மிகச் சிலர்.. ஸ்ருதி பேதம் காட்டக் கூடும். ஆனால், யோசித்துப் பார்த்தார்களென்றால்... அவர்களுக்கு மட்டுமல்ல.. அத்தனைப் பேருக்கும் புரியும், இசைக்கும் இளையராஜாவுக்கும் வேறு வேறு தேதிகளில் பிறந்த நாள் இல்லையென்று!

அன்னக்கிளி
ராஜாவின் பண்ணைப் புர ஆரம்பத்திலிருந்து, அவர் சினிமாவில் பட்ட பாடுகளெல்லாம் இன்று தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோருக்குமே மனப்பாடம். 1975- மே 14-ம் தேதி அன்னக்கிளி வெளியான பிறகு தமிழ் சினிமா இசை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம், இந்த 40 ஆண்டுகளில் புதுப்புது உயரங்களைத் தொட்டு நிற்கிறது.

1000 படங்கள்...
இந்த நாற்பதாண்டுகளில் இளையராஜா இசையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 1000. இன்றைக்கு எதையெல்லாம் நவீனம் அல்லது புரட்சிகரமான இசை என சிலாகிக்கிறோமோ, அவற்றையெல்லாம் கால் நூற்றாண்டுக்கும் முன்பே, போகிற போக்கில் தந்துவிட்டவர் இளையராஜா.

அதான் ராஜா
பொதுவாக ராஜாவின் இசையில் சிக்கலான சமாச்சாரங்கள் ஏதுமில்லை. அப்படியே இருந்தாலும் பாமரனுக்கும் பண்டிதனுக்கும், வேறு வேறு நிலைகளில் பரம இன்பத்தைத் தருவதுதான் அவர் இசையின் சிறப்பு. கலைவாணியே..., சொல்லவல்லாயோ... எல்லாம் அப்படித்தான்.

தனி இசைத் தொகுப்புகள்
ரமண மாலை, அம்மா பாமாலை, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், மியூசிக் மெசையா என ராஜாவின் தனி இசைத் தொகுப்புகள் (ஆல்பங்கள்) மட்டுமே 28 வெளியாகியுள்ளன. இவை அனைத்துமே அவரது திரைப்பாடல்களுக்கு நிகரான, சில அவற்றையும் தாண்டிய புகழைப் பெற்றவை.

இன்றும் அவர் இசைதான் நாயகன்
எண்பதுகள், தொன்னூறுகள்... இதோ இந்த இரண்டாயிரம்கள்... கால கட்டங்கள் மாறினாலும், ஒரு படத்தின் ஜீவ ஓட்டமாக இருப்பது அவர் இசை மட்டும்தான். இதோ... அடுத்த வாரம் வரும் உன் சமையலறையில் பாடல் கேட்டுப் பாருங்கள்... 'இந்த ஜென்மமே ராஜாவின் இசை கேட்டுக் கிடக்கத்தான்..' என்று சொல்வீர்கள்!

ஆண்டுக் கணக்கு எதுக்கு?
இன்று அவரது பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்ற ஆண்டுக் கணக்கு எதற்கு... வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனாக, இளையராஜா ஜீவித்திருக்க வாழ்த்துவோம்!

Tags: 

Leave a Reply